Thursday, October 7, 2010

ரிசர்வ் வங்கி

ஆண்டு வெளியீடுகள்
ஆண்டறிக்கைகள்
ஆகஸ்ட் இறுதியில் வருடாவருடம் வெளியிடப்படும் ஆண்டறிக்கை மிகவும் முக்கியம் வாய்ந்தது. நாட்டின் பொருளாதாரம், ரிசர்வ் வங்கியின் செயல்பாடு, அதன் நிதிநிலை அறிக்கை பற்றிய விபரங்கள் அதன் மைய இயக்குநர் குழுவின் ஒப்புதலோடு அளிக்கப்படுகிறது. இந்தியப்பொருளாதாரத்தைப் பற்றிய கணக்கீட்டையும், எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கியது.
ஆகஸ்டில் வெளியிடப்படும் இந்த அறிக்கை சட்டரீதியானது, ரிசர்வ் வங்கியின் நிதியாண்டான (ஜூலை – ஜுன்) ஆண்டுக்குரியது.
இந்திய வங்கியியல் நடைமுறையும் வளர்ச்சியும்
இதுவும் சட்டரீதியான வெளியீடு. ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படுகிறது. முந்தைய ஆண்டில் நிதித்துறைக் கொள்கைகளின் மறுஆய்வுச் செயல்பாடுகளையும் இவ்வறிக்கை பறைசாற்றுகிறது. ஏப்ரல் முதல் மார்ச் முடிய உள்ள ஆண்டிற்கான அறிக்கை நவம்பர் / டிசம்பரில் வெளியிடப்படுகிறது.
பணநாணய நிதி அறிக்கை
மைய வங்கியின் பணியாளர்களால் வெளியிடப்படும் ஆண்டறிக்கை இது. 1998-99 தொடங்கி ஒரு குறிப்பிட்ட கருத்தை மையமாகக் கொண்டு, அது சம்பந்தமான அனைத்துப் பொருளாதார விஷயங்களையும் பற்றி விரிவான மதிப்பீடு இருக்கும். எக்கொள்கை பற்றி அறிக்கையில் முக்கியத்துவம் கொள்ளப்பட்டிருக்கிறதோ, அதோடு மட்டுமல்லாமல் இந்தியாவுக்குச் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சவால்கள் என்று பல்வேறு விபரங்களையும் உள்ளடக்கி இருக்கும். இது டிசம்பரில் வெளியிடப்படுவதால், இடைக்காலப் பொருளாதார ஆய்வினை மேற்கொள்ளவும் வசதியாக இருக்கின்றது.
இந்தியப்பொருளாதார புள்ளி விபரப்புத்தகம்
இந்தியப்பொருளாதாரம் பற்றிய அனைத்து புள்ளி விபரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள உதவும் வகையில் இவ்வெளியீடு அமைகிறது. ஆண்டு, காலாண்டு, மாத, இருவார, தின கால அளவில் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்பட்டு புள்ளிவிபரக் கொள்கலனாக இது விளங்குகிறது. தேசிய வருமானம், உற்பத்தி, பணம், வங்கியியல், நிதிச்சந்தை, பொதுநிதி, பன்னாட்டு வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி நிலுவை சம்பந்தமான புள்ளி விபரங்களைப் புத்தகமாகவும், கணிணித்தட்டாகவும் தருகிறது.
இந்தியப் பொருளாதாரத்திற்கான புள்ளிவிபர அடிப்படை
இந்தியப்பொருளாதாரம் பற்றிய புள்ளி விபரங்களின் அடிப்படையாக, கொள்கலனாக ரிசர்வ் வங்கி இணைய தளத்தில் வெளியிடுகிறது. ஆராய்ச்சியாளர்கள் இத்தளத்தை அணுகவும் தேவைப்படும் விபரங்களை எடுத்துக்கொள்ளவும் உதவுகிறது.
மாநில நிதிகள்
மாநில அரசுகளின் நிதி மதிப்பீடுகளை அவைகளின் நிதிநிலை அறிக்கை மூலம் ஆராய்ந்து ஒருங்கிணைந்த ஆய்வினை அளிக்கிறது. மாநிலங்களுக்கான ஒதுக்கீடுகளை அளிக்க இது உதவுகிறது.
இந்திய வங்கிகள் சம்பந்தமான புள்ளிவிபரப் பட்டியல்கள்
இது வணிக வங்கிகளைப்பற்றிய புள்ளி விபரங்கள் அடங்கிய ஆண்டு வெளியீடு. ஒவ்வொரு வங்கி சம்பந்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மற்றும் செயல்பாடு பற்றிய விபரங்கள் அடங்கும். வங்கிக்குழு வாரியாகவும், மாநில வாரியாகவும் இந்த விபரங்கள் தயாரிக்கப்படுகின்றன.
அடிப்படைப் புள்ளிவிபர அறிக்கைகள்
இதுவும் ஒரு ஆண்டு வெளியீடு. பட்டியலிடப்பட்ட வங்கி வாரியாக, அலுவலகங்கள், அலுவலர்கள, வைப்புகள், கடன்கள் பற்றிய விபரங்கள் திரட்டப்படுகின்றன. வட்டார, மாநில, மாவட்ட ரீதியாக புள்ளி விபரங்கள் அளிக்கப்படுகினறன.
காலாண்டு வெளியீடுகள்
மொத்தப் பொருளாதார பண நிகழ்வுகள்
 ஆளுநர் அளிக்கும் ஆண்டுக்கொள்கை அறிவிப்பிற்கு ஒரு நாள் முன்னரும், இடைக்கால / காலாண்டு மறுஆய்வுக்கு ஒரு நாள் முன்னரும் இது வெளியிடப்படுகிறது. தேவையான விபரங்களையும், தொழில் நுட்ப அணுகுமுறைகளையும் எடுத்துரைக்கிறது. 2004 வரை ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டுக்கொள்கை அறிவிப்பிற்கு முன்னரும் 2005லிருந்து ஆண்டுக்கொள்கை அறிவிப்பு, இடைக்கால மறு ஆய்வு, காலாண்டு மறு ஆய்வுக்கு முன்னரும் வெளியிடப்படுகிறது.
மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் முடிய உள்ள காலாண்டுகளுக்கு இது வெளியிடப்படுகிறது.
மாதாந்திர வெளியீடு 
ரிசர்வ் வங்கி அறிக்கை
ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெளியிடப்படுகிறது. குறிப்பிட்ட காரணங்களுக்காகச் சேர்க்கப்படும் புள்ளி விபரங்களைத் தொகுத்தாராய்ந்து இவ்வறிக்கை வெளியிடப்படுகிறது. ஆளுநர், துணை ஆளுநர், நிர்வாக இயக்குநர்களின பேச்சினை / சொற்பொழிவை வெளியிடுகிறது. இதன் மூலம் மையவங்கியின் கொள்கைகளை உணர்ந்து கொள்ளலாம். முக்கியமான பத்திரிக்கை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், இந்தியப் பொருளாதார வளர்ச்சி, நிதி வங்கி பற்றிய கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. ஆண்டுக் கொள்கை அறிவிப்பு, இந்திய வங்கிகளின் நடைமுறை வளர்ச்சி இவைபற்றி சிறப்புக் கட்டுரைகள் அவ்வப்போது பிரசுரமாகின்றன.
பணகடன் தகவல்கள் மறுஆய்வு
நான்குபக்க மாத வெளியீடு வங்கிகளுக்கு பெரிதும் உதவும். மையவங்கியின் முக்கியமான சுற்றறிக்கைகளை பிரசுரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் 1 முதல் 5 ஆம் தேதிக்குள் வெளியிடப்படுகிறது.
வாரவெளியீடு
புள்ளி விபர துணை வெளியீடு
ரிசர்வ் வங்கியின் வாராந்திர நிதி நிலை அறிக்கை இது. நிதி, பொருள், தங்கச்சந்தைகளின் முக்கிய நிகழ்வுகளை வெளியிடுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் பிற்பகல் 12 மணிக்கு இது வெளியிடப்படுகிறது.
பத்திரிகை வெளியீடு
பணச்சந்தை நிலவரங்கள் பற்றியும், நான்கு பெரிய குறிக்கப்பட்ட அந்நிய நாணயங்களுக்கான வீதங்கள் பற்றியும் (டாலர், யூரோ, பவுன்ட், ஸ்டர்லிங், யென்), முக்கிய வங்கியியல் ஒழுங்கு முறைகள் பற்றியும், நகரக் கூட்டுறவு வங்கிகள் பற்றியும் தினமும் பத்திரிகைச்செய்தி வெளியிடுகிறது.
நான்கு மாதத்துக்கு ஒரு முறை இது வெளியிடப்படுகிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகள் அடங்கிய வெளியீடு. கட்டுரை ஆசிரியர்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளே ஆகும். 1999லிருந்து ஆண்டுக்கு மூன்று முறை வெளியிடப்படுகிறது.
வளர்ச்சி ஆராய்ச்சி குழுமக்கல்வி
ரிசர்வ் வங்கிப் பணியாளர்களுடன் கலந்து வெளி வல்லுநர்கள் நடத்திய ஆராய்ச்சிகள் வெளியிடப்படுகின்றன. உன்னத ஆராய்ச்சிகளில் வெளி வல்லுநர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் அமைப்பாக இக்குழுமம் உதவுகிறது.
அறிக்கை
ரிசர்வ் வங்கி தான் நியமித்த குழுக்களின் அறிக்கைகள், கருத்துக்கேட்பு இவைகளை வெளியிடுகிறது.

No comments:

Post a Comment