Wednesday, September 15, 2010

சங்க காலம்

சங்க காலம் என்பது கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரையான காலம்  இந்தக் கால கட்டத்தில் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களைப் பற்றி மிக குறைவான தகவல்களே கிடைத்துள்ளன.
தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மெகஸ்தனிஸ் பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுப்த மௌரியரின் மந்திரி கௌடில்யரும் பாண்டியர்களைக் குறிப்பிட்டுள்ளார். மஹாபாரதமும், ராமாயனமும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடுகிறது.
அசோகரின் குறிப்புகளும் தனது நாட்டின் தெற்கு எல்லையில் உள்ள அரசுகள் என்று சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் பற்றிக் கூறுகிறது. ரோமுக்கும் இந்தியாவிற்குமிடையில் பெருகி வந்த வர்த்தகத்தை தாலமி குறிப்பிடுகிறார்.
சங்க காலத்தின் இறுதியில் மதுரையைக் கைப்பற்றிய களப்பிரர்கள் சங்க காலச் சிறப்புகள், தகவல்களை அழித்து விட்டதாக கூறப்படுகிறது.இவர்களது  காலம் தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என குறிப்பிடப்படுகிறது
இலக்கியங்கள்  தரும் சான்றுகளிலிருந்து தமிழகத்தின் வரலாற்றுக்கு உட்பட்ட காலம் சங்ககாலம் என்பது பெறப்படுகிறது. இக்காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் பாண்டியன், சோழன், சேரன் என்ற முப்பெரும் மன்னர்கள்  அரசாண்டு வந்தனர். பாண்டியரின் தலைநகரம் மதுரை; சோழர்களின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினமும்(புகார்) உறையூரும் ஆகும். சேரனின் தலைநகரம் வஞ்சி.
சங்க கால பாடல்களே சங்ககாலத் தமிழகத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்துகின்றன. 'சங்கம்' என்னும் சொல் (புலவர் கூட்டம் என்ற பொருளில்) சங்க இலக்கியம் ஒன்றிலேனும் இடம் பெறவில்லை.  இதற்கு நேரான தமிழ்ச் சொற்கள் கூடல், அவை, மன்றம் போன்றவை ஆகும்.  பண்டைத் தமிழகத்தில் தமிழ்ப் புலவர்கள் கூடித் தலை, இடை, கடை என்று மூன்று சங்கங்கள் அமைத்து, அவற்றின் வாயிலாகத் தமிழ் வளர்த்தார்கள்
தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய குறிப்புகள் இறையனார் களவியல் உரையில் தான் முதன் முதலாகக் காணப்படுகின்றன. தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்ற மூன்று சங்கங்களைப் பற்றிய வரலாற்றை அவ்வுரை சுருக்கிக் கூறுகின்றது. திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி தம் நூலில் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிப் பாடியுள்ளார். வில்லிபுத்தூராரும், தாம் பாடிய பாரதத்தில் 'நன்றறிவார் வீற்றிருக்கும் நன்மாடக் கூடல்' என்று மதுரையைப் புகழும்போது 'நன்றறிவார்' எனச் சங்கப் புலவர்களைக் குறிப்பிடுகிறார்.
முதல் சங்கம் 
குமரிக் கண்டத்திலிருந்த தென்மதுரையில் முதற் சங்கம் நடைபெற்று வந்தது. சிவபெருமான், அகத்தியனார், முருகக் கடவுள், முரஞ்சியூர் முடி நாகனார், குபேரன் முதலாய 549 புலவர் அதன்கண் அமர்ந்து தமிழ் வளர்த்தனர். அச்சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த புலவர்களின் எண்ணிக்கை 4449. அவர்கள் பரிபாடல்கள் பலவற்றையும், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற நூல்களையும் இயற்றினார்கள். இந்தத் தலைச் சங்கம் தொடர்ந்து 4440 ஆண்டுகள் நடைபெற்றது. காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகப் பாண்டிய மன்னர் 89 பேர் இச்சங்கத்தைப் பாதுகாத்து வந்தார்கள். அக்காலத்தில் எழுந்த நூல்களுக்கு இலக்கணமாக இருந்த நூல் அகத்தியம்.
இடை சங்கம் 
  கபாடபுரத்தில்  இடைச் சங்கம் செயல்பட்டது . தொல்காப்பியர், இருந்தையூர்க் கடுங்கோழியார், மோசியார், வௌ¢ளூர்க் காப்பியனார், சிறுபாண்டரங்கனார், திரையன் மாறனார், துவரைக்கோன், கீரந்தையார் முதலிய 59 பேர் இச்சங்கத்தினை வளர்த்தனர்  . அவர்களுடன் இச்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 3700. வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டிய மன்னர்கள் இச்சங்கத்தின் புரவலர்களாய்த் திகழ்ந்தனர். அவர்களுள் ஐவர் தாமே புலவர்களாகவும் அச்சங்கத்தில் அமர்ந்திருந்தனர். இச்சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. இச்சங்கத்துக்கு அகத்தியமும், தொல்காப்பியமும் இலக்கண நூல்களாகத் திகழ்ந்தன.
கடை சங்கம்
 கடைச்சங்கம் தற்போதைய மதுரையில் செயல்பட்டது  இச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்த புலவர்கள் 49-பேர். இவர்களுள் மூவர் பாண்டிய மன்னர். சேந்தம் பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகிய புலவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் உள்ளிட்ட 449பேர் பாடினர். இயற்றப்பட்ட நூல்கள் நெடுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலிநூற்றைம்பது, பரிபாடல் எழுபது, கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன. கடைச் சங்க காலத்தில் வழங்கிய இலக்கண நூல் தொல்காப்பியம். இச்சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்தது. இக்கடைச் சங்கத்தை மதுரையில் நிறுவியவன் பாண்டியன் முடத்திருமாறன் என்னும் மன்னன். இதன் இறுதி ஆண்டுகளில் அரசாண்டவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இவ்வாறு களவியல் உரை கூறுகிறது.
பாண்டிய மன்னர் அவையில் புலவர்கள் பலர் வீற்றிருந்த வரலாற்றை வேள்விக்குடிச் செப்பேடு குறிப்பிடுகின்றது.
கடைச் சங்கப் பாடல்களில், சங்கம் இருந்தமைக்குரிய  அகச் சான்றுகள் பல உள்ளன.
மேலும், தொல்காப்பியம்  வேறுபல நூல்களிலும் சங்கம் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர், நேரடியாகவே 'சங்கம்' என்ற குறிப்பும் சொல்வழக்கும் பல பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்று சின்னமனூர்ச்செப்பேடு குறிப்பிடுகிறது
கபாடபுரம் பாண்டியனுடைய தலைநகராய் இருந்த பிறகு தென்மதுரை தலைநகராக மாறியதற்கு இராமாயணம், மகாபாரதம், கௌடில்யரின் அர்த்த சாத்திரம் ஆகிய நூல்களில் சான்றுகள் கிடைக்கின்றன.
கன்னியாகுமரிக்குத் தெற்கில் துறைமுகம் ஒன்று இருந்ததாகப் பிளினி கூறுகின்றார்.  வட மதுரையானது பாண்டிய நாட்டின் தலைநகராவதற்கு முன்பு பாண்டியர்கள் அதற்குத் தென்பால் கபாடபுரத்தில் அமர்ந்தும், அதற்கும் முன்பு மேலும் தெற்கில் அமைந்திருந்த தென்மதுரையிலிருந்தும் ஆட்சி புரிந்து வந்தனர் என்ற வரலாறு உண்மையே என்று பேராசிரியர். கே.கே. பிள்ளை போன்றோர் உறுதிப்படுத்துகின்றனர்.


.

No comments:

Post a Comment